Friday, September 30, 2011

நான் ஒரு சிறு பிள்ளை....




அன்புக்கு அடையாளம் காட்டும்
என் இனிய பெற்றோரே!
என் செய்கை,
என் அடம்,
என் சேட்டை,
நான் தரும் கரைச்சல்கள்......
சில நேரங்களில்
சலிக்க உங்களைச் செய்யும்.
சில  வேளைகளில்
சினம் கொள்ள வைக்கும்.
என்றாலும்...
நான் ஒரு சிறு பிள்ளை....
உங்களின் பிள்ளை இல்லையே?
 
சின்னஞ்சிறிய இந்தக்
கால்களின் தடங்களும்,
கைகளின் பதிவுகளும்......
பின்னொரு நாளில்
எண்ணிப் பார்க்கையிலே
புன்சிரிப்பைச் சுமந்து தரும்!


காலக்  கண்ணாடியில்
கடக்கும் இந்தக் காலங்களை
மனக் கண்ணோரம் இனிதே
மீட்டிடும் போதினிலே....
இமையோரம் களிப்போடு
கசியும் கண்ணீரும்,
இதழோரம் இழையோடும்
இனிய புன்முறுவலும்;
போட்டிக்கு வாராவோ?


உங்கள் பாதுகாவலிலும், பரிவிலும்,
தங்கி வளரும் தவ்வல் நான்.
நான்,எனக்கு,எனது என்று மட்டுமே
நினைக்க எனக்கு வருகிறதே!
என்னைச்சுற்றியே எல்லாம்
என்றே எனக்கு தெரிகிறதே!
தன்னலமே முன்னணியில்
தலையாட்டும் பருவம்
இன்றையநாளில்  என்னதன்றோ?
என்னை வளரும்  வழிகாட்டி
முன்னேற்றிட வேண்டிய   
என் உலகத்தின் முதல் உறவே!
என் புரளி குழப்படிகளுக்குத்
தண்டனையாக உடல்வலியை
தயைசெய்து தந்திட வேண்டாமே!


 பிடிவாதத்துக்கு
அடி மருந்தாக அமைந்திடாதே!
அடி ஒரு கணக்கில்
பழக்கமான ஒரு
நட்பாகிடக் கூடும்.
சொன்ன சொல் மாறாமல்
தன்னிலை தளும்பாமல்
வகுத்திடும் எல்லைகள்
வளர்த்திடும் கொள்கைகள் என்னைத்
தடுமாற்றம் இன்றி
நடமாட வைக்கும்.


அரியண்டம் தாங்கேலாமல்
ஒருகணம் அடித்து;
அழுத கண்ணீர் கண்டு
மறுகணம் அன்பால் துடித்து;
இளகும் உங்கள் மனமும்,
தளரும் கொள்கை வேலிகளும்;
நான் செய்வதே சரி
என என்னை எண்ணிடப் பழக்கும்.


அடியும் திட்டும் என்னை
சரி பிழை பற்றி ஆராயும் அறிவற்ற,
அடிக்கு அடங்கும் அடிமையாக
வசைக்கும், வாய்ச்சாலத்துக்கும்
வசைந்து போகும் வீணனாக,
ஆக்கிடாதோ? அதுவோ உம் ஆசை?


பிள்ளையார் பிடிக்க
உள்ளத்தால் உள்ளுகின்றீர்!
குரங்காக அது
உரு மாறுவது சிலநேரம்.
பிள்ளைமனம் பற்றி
எள்ளளவும் எண்ணாமல்
பிள்ளைவளர்ப்பில் அடித்தல் என்பது
பின்னிப்பிணைந்தது என்றே
பிழையாக உன்னுகின்றீர்!




பிள்ளை என்றாலும்  இந்தப்
பிஞ்சு நெஞ்சுக்கும்
வெக்கமும், துக்கமும் உண்டன்றோ?
நொந்த உடலும்,வெந்த மனமும்;
சிந்தையில் கசப்பை பதிந்திடாதோ?
எந்த நாளிலும் எண்ணும் போதெல்லாம்
எரிச்சலைக் கொதியை கிளப்பிடாதோ?


பின்னொரு   காலத்தில்
பெற்றோருடன் எனக்கிசைந்த
சீவியம் இதனை நான்
சிந்திக்கும்  போதினிலே
ஆவியும் அகமும் மகிழ்வுற நான்
அசைந்திட வேண்டும்.
இன்பத்தின் நினைவில்
இசைத்திட வேண்டும்!
எந்தன் எண்ணங்களும்
உங்கள் ஆசைகளும் ஒன்றாக
இசைந்திட வேண்டும்!
இசைவீரோ?
என் பிறவிக்கு உறவான
என் இனியோரே!

No comments:

Post a Comment