Thursday, September 25, 2014

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு

இறைத்தூதர்களில் இறுதியானவராகவும் இஸ்லாத்தின் வழிகாட்டியாகவும் வந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்வது முஸ்லிம்களின் மீது முக்கிய கடமையாகும். அவர்களின் வரலாறுகள் தொடர்பாக ஏராளமான நூல்கள் வந்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் ஆதாரமில்லாத கற்பனைச் செய்திகளே நிறைந்துள்ளன.
இந்தக் குறையை நிறைவு செய்யும் வண்ணமும் நமது குழந்தைகளுக்குக் கேள்வி பதில் வடிவத்தில் எளிமையாகக் கற்றுக் கொடுப்பதற்கும் இந்தத் தொடரை நாம் ஏற்படுத்தியுள்ளோம். இத்தொடரைப் படிக்கும் சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை முழுமையாக அறிந்த திருப்தி ஓரளவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இத் தொடரை உங்கள் குழந்தைகளை படிக்கச் சொல்லுங்கள். அல்லது நீங்கள் படித்து நபிகளாரின் வரலாறை சொல்லிக் கொடுங்கள்.

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் பிறந்த கிழமை எது?
பதில்: திங்கள் கிழமை (ஆதாரம்: முஸ்லிம் 1977)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் எந்த வருடத்தில் பிறந்தார்கள்?
பதில்: கி.பி. 570 என்று சிலரும் கி.பி 571 ஏப்ரல் 21 என்று சிலரும் குறிப்பிடுகின்றனர். அரபி மாதப்படி ரபீவுல் அவ்வல் 12 என்று சிலரும் ரபீவுல் அவ்வல் 9 என்று சிலரும் குறிப்பிடுகின்றனர். (நபி (ஸல்) அவர்கள் பிறப்பு தொடர்பாக வலிமையான ஆதாரங்களுடன் உள்ள எந்தச் செய்தியையும் நாம் அறியவில்லை. வரலாற்று நூல்களில் பிரபலமாக எழுதப்பட்டுள்ளதை இங்கே குறிப்பிட்டுள்ளோம்)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தந்தை பெயர் என்ன?
பதில்: அப்துல்லாஹ் (ஆதாரம்: புகாரீ 2700 )

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன?
பதில்: ஆமினா (ஆதாரம்: முஸ்லிம் 3318)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் பெயர் என்ன?
பதில்: அப்துல் முத்தலிப் (ஆதாரம்: புகாரீ 2864)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தந்தையுடன் பிறந்தவர்கள் ஆண்கள் எத்தனை பேர்?
பதில்: 1. ஹாரிஸ் 2. ஸுபைர் 3.அபூதாலிப் 4.அப்துல்லாஹ் 5. ஹம்ஸா (ரலி) 6. அபூலஹப் 7.கைதாக் 8. முகவ்விம் 9. ஸிஃபார் 10. அப்பாஸ் (ரலி) ஆகிய பத்து நபர்களாகும். (ஆதாரம்: இப்னு ஹிஷாம்)

கேள்வி: இவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் யார்?
பதில்: ஹம்ஸா (ரலி), அப்பாஸ் (ரலி) (ஆதாரம்: அல்இஸ்தீஆப்)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தந்தையுடன் பிறந்த பெண்கள் எத்தனை பேர்?
பதில்: 1. ஸஃபிய்யா (ரலி), 2. ஆத்திகா, 3. அர்வா, 4. உமைய்யா, 5. பர்ரா, 6. உம்மு ஹகீம் ஆகிய ஆறு நபர்கள். (ஆதாரம்: மஸாயிலு இமாம் அஹ்மத்)

கேள்வி: இவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் யார்?
பதில்: ஸஃபிய்யா (ரலி), மற்றவர்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தந்தை எப்போது இறந்தார்?
பதில்: நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டார். (ஆதாரம்: இஸ்தீஆப்)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தாயார் எப்போது இறந்தார்கள்?
பதில்: நபி (ஸல்) அவர்கள் ஆறு வயதை அடைந்த போது இறந்தார். (ஆதாரம்: இஸ்தீஆப்)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் இறந்த பின்னர் அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள் யார்?
பதில்: அப்துல் முத்தலிப். அதன் பின்னர் நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் 
(ஆதாரம்: அஸ்ஸீரத்துன் நபவிய்யா லி இமாம் தஹபீ)

கேள்வி: நபி (ஸல்) அவர்களை வளர்த்த பெண்மணி யார்?
பதில்: உம்மு ஐமன் (ரலி) (ஆதாரம்: புகாரீ 3737)

கேள்வி: நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டியவர்கள் யார்? யார்?
பதில்: 1. ஸுவைபா (ஆதாரம்: புகாரீ 5101), 2. ஹலீமா அஸ்ஸஃதிய்யா (ஆதாரம்: இப்னு ஹிப்பான் 6335)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் சிறு வயதில் என்ன வேலை செய்தார்கள்?
பதில்: ஆடு மேய்த்தல் (ஆதாரம்: புகாரீ 3406)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராவதற்கு முன்னர் குறைஷிகள் கஅபத்துல்லாஹ்வை புதுப்பிக்கும் போது நபி (ஸல்) அவர்களின் வயது என்ன?
பதில்: 35 (ஆதாரம்: தப்ரானீ பாகம்: 18, பக்கம்: 342)

கேள்வி: கஅபத்துல்லாஹ்வைப் புதுப்பிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் என்ன உதவியை செய்தார்கள்?
பதில்: கஅபத்துல்லாஹ் கட்டுவதற்குரிய கற்களை எடுத்துச் செல்லும் வேலை செய்தார்கள். (ஆதாரம்: புகாரீ 1582)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவியின் பெயர் என்ன?
பதில்: கதீஜா (ரலி) (ஆதாரம்: புகாரீ 3816)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் தமது எத்தனையாவது வயதில் கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் முடித்தார்கள்? அப்போது கதீஜா (ரலி) அவர்களின் வயது என்ன?
பதில்: நபி (ஸல்) அவர்களின் வயது 25, கதீஜா (ரலி) அவர்களின் வயது 40 (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: நபி (ஸல்) அவர்களுடன் கதீஜா (ரலி) அவர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?
பதில்: 25 ஆண்டுகள் (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: கதீஜா (ரலி) அவர்கள் உலகத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?
பதில்: 65 ஆண்டுகள் (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் முடித்த போது அவர்கள் கன்னிப் பெண்ணா? விதவையா?
பதில்: இரண்டு திருமணங்கள் முடித்த பின்னர் விதவையாக இருந்தார்கள் (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: கதீஜா (ரலி) அவர்களின் முந்தைய கணவர்களின் பெயர்கள் என்ன?
பதில்: 1. அபூ ஹாலா பின் ஸுராரா, 2. அதீக் பின் ஆயித் (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: கதீஜா (ரலி) அவர்களுக்கு அன்றைய காலத்தில் இருந்த பட்டப் பெயர் என்ன?
பதில்: தாஹிரா – பரிசுத்தமானவள் (ஆதாரம்: தாரிக் திமிக்ஸ், பக்கம் 109)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியர்களில் அதிகம் நேசித்த மனைவி யார்?
பதில்: கதீஜா (ரலி) (ஆதாரம் புகாரீ 3818)

கேள்வி: நபி (ஸல்) அவர்களுக்கு யார், யார் மூலம் குழந்தை பிறந்தது?
பதில்: அன்னை கதீஜா (ரலி), மாரியத்துல் கிப்திய்யா (ரலி) (ஆதாரம்: புகாரீ 3818, 1303, தாரகுத்னீ பாகம்: 4, பக்கம்: 132)

கேள்வி: மாரியத்துல் கிப்திய்யா (ரலி) அவர்கள் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு பிறந்த குழந்தையின் பெயர் என்ன?
பதில்: இப்ராஹீம் (ஆதாரம்: புகாரீ 1303)

கேள்வி: நபி (ஸல்) அவர்களது குழந்தை எத்தனை வயதில் இறந்தது?
பதில்: 16 மாதம் (ஆதாரம்: அபூதாவூத் 2772)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் அவர்கள் இறந்த போது நடந்த முக்கிய நிகழ்ச்சி என்ன?
பதில்: சூரிய கிரகணம் ஏற்பட்டது (ஆதாரம்: புகாரீ 1043)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் பெண் குழந்தைகள் பெயர்கள் என்ன?
பதில்: ஜைனப் (ரலி), ருகைய்யா (ரலி), உம்மு குல்ஸþம் (ரலி), ஃபாத்திமா (ரலி) (ஆதாரம் புகாரீ 516, 5842, 357 அஹ்மத் 525)

கேள்வி: ஜைனப் (ரலி) அவர்களின் கணவர் பெயர் என்ன?
பதில்: அபுல் ஆஸ் பின் ரபீவு (ஆதாரம்: திர்மிதீ 1062)

கேள்வி: ஃபாத்திமா (ரலி) அவர்களின் கணவர் பெயர் என்ன?
பதில்: அலீ (ரலி) (ஆதாரம்: புகாரீ 441)

கேள்வி: அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு என்ன உறவு?
பதில்: நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களின் மகன் அலீ (ரலி) அவர்கள் (ஆதாரம்: புகாரீ 441)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் குழந்தைகளில் இறுதியாக இறந்தவர் யார்?
பதில்: பாத்திமா (ரலி), நபி (ஸல்) அவர்கள் இறந்து ஆறு மாதம் கழித்து இறந்தார்கள் (ஆதாரம்: புகாரீ 3093)



இதை பதிவிட்ட சகோதர்க்கு அல்லாஹ் பரக்கத் செய்வானாக


என்றும் சேவையில்


A.SETTU